
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 184/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்தியாவிற்கு கடைசி நேரத்தில் களமிறங்கிய அதிரடியாக பேட்டிங் செய்து அபாரமான பினிஷிங் கொடுத்த சூர்யகுமார் யாதவ் 65 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 35* ரன்களும் எடுத்தார்கள்.
இதை தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் 2 போட்டிகளை போலவே சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் 61 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்களில் கேப்டன் கிரண் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தியாவின் மிகச் சிறப்பான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 167/9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா இந்த போட்டியையும் வென்ற காரணத்தால் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது.