தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும் - எம்எஸ் தோனி!
எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை, சென்னை அணியின் தீபக் சஹர் 50 வயதில் தான் எட்டுவார் என்று சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கலாய்த்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து மிகப் பிரபலமான ஒரு வீரர் உருவானார் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். அதே சமயத்தில் மிக வெற்றிகரமான வீரராக தன் துறையில் இருந்தவர் என்றால் அவருக்கு போட்டியே கிடையாது. இரண்டு உலகக் கோப்பைகள் ஒரு ஐசிசி கோப்பை என இனி வரக்கூடிய கேப்டன்கள் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய எல்லையை உருவாக்கி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இன்னும் கூடுதலாக ஒரு ஆண்டு விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் தெரிகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று, அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. கேப்டனாக அதிக கோப்பையை வென்ற ரோகித் சர்மாவின் சாதனையும் சமன் செய்யப்பட்டது.
Trending
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை அணியோடு மட்டும் அல்லாமல் சென்னையோடும் மனரீதியான நல்ல பிணைப்பு இருக்கிறது. தற்பொழுது அவர் சொந்தமாக படம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, எல் ஜி எம் என்று ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இவ்விழாவில் பேசிய எம்எஸ் தோனி, “எனது டெஸ்ட் அறிமுகம் சென்னை மண்ணில் தான் நிகழ்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் அடித்திருக்கிறேன். தற்போது தமிழில் தான் என் நிறுவனத்தின் முதல் படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண் எப்போது ஸ்பெஷலானது. இந்த மண்ணின் பிள்ளையாக நான் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே தத்தெடுக்கப்பட்டுவிட்டேன்.
நான் என் மனைவிக்கு எந்த தமிழ் கெட்டவார்த்தையும் இதுவரை சொல்லிக் கொடுத்ததே இல்லை. எனக்கும் தமிழ் மொழியில் எந்த கெட்ட வார்த்தையும் தெரியாது. ஆனால் மற்ற மொழிகளில் கெட்ட வார்த்தை நன்றாக தெரியும். எல்ஜிஎம் படம் நிகழ்ந்ததற்கு விதிதான் காரணம். எனக்கும் சென்னைக்கும் இடையே வலிமையான பந்தம் உள்ளது. அதேபோல் திருமணமான அனைவருக்கும் வீட்டில் யாரின் ஆட்சி நடக்கும் என்பது புரியும்” என்று மனைவியை கிண்டல் செய்தார்.
பின்னர் தீபக் சஹர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தீபக் சஹர் ஒரு ஒயினை போன்றவர். அவர் உடனிருந்தால் ஏன் இவர் இருக்கிறார் என்று தோன்றும். எங்களுடன் இல்லையென்றால், அவரை தான் மனம் தேடும். அவரிடம் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியாக செயல்பட தொடங்கியுள்ளார்.
ஆனால் முழுமையாக முதிர்ச்சியடைய அவருக்கு நீண்ட நேரம் எடுக்கும். அதுதான் கொஞ்சம் பிரச்சனை. என் வாழ்நாளில் அவர் முதிர்ச்சியாக செயல்பட்டு பார்ப்பேனா என்ற சந்தேகம் உள்ளது. தீபக் சஹருக்கு 50 வயதானாலும் எனது மகள் ஸிவா இப்போது அடைந்துள்ள முதிர்ச்சியை பெறுவாரா என்பதும் சந்தேகமே” என்று கலாய்த்து தள்ளியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now