ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கான போட்டியாக ஆசியக்கோப்பை இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் மோதி வருகிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முடிவடைகிறது. எனவே ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இதற்காக மும்பையில் நேரடியாக அனைத்து அதிகாரிகளும் கூடவுள்ளனர்.
Trending
15 பேர் கொண்ட அணியில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு அஸ்வின் இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இதே போல காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுலுக்கும் நேரடியாக ஆசியக்கோப்பை தொடரில் வாய்ப்பு தரப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர வீரர் தீபக் சாஹருக்கும் அணியில் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் தசைநார் கிழிவால் பாதிக்கப்பட்ட அவர், அதன்பின்னர் ஐபிஎல் தொடர், இங்கிலாந்து என எந்தவொரு போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை.
ஆனால் தற்போது அவரின் கம்பேக் நேரடியாக ஆசியக்கோப்பையில் இருக்கும் எனக்கூறப்படுகிறது. முழு உடற்தகுதியுடன் உள்ள தீபக் சாஹருக்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் ஒரு உடற்தகுதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை கடந்துவிட்டால், சாஹரால் அணியில் பங்கேற்க முடியும் எனக்கூறப்படுகிறது.
ஒருவேளை அவரின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றால், அவரை ரிசர்வ் பவுலராக அழைத்துச் செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது மெயின் அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், தீபக் சஹாரை அழைத்துக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தனது உடற்தகுதி குறித்த அப்டேட்டை தீபக் சஹார் கொடுத்துள்ளார். அதுகுறித்து பேசியுள்ள அவர், “நான் தற்போது முழுமையாக குணமடைந்துவிட்டேன். மீண்டும் அணியின் வெற்றிக்காக விளையாட காத்திருக்கிறேன். அதேபோல் டி20 உலகக்கோப்பையை வெல்வதே என லட்சியமாக கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இச்செய்தி தீபக் சஹார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now