
அமீரகத்தில் நடைபெற்றுவரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்தது. இதில் 186 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு வெறும் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தும் கடும் நெருக்கடிக்கு ஆளான பஞ்சாப் அணி 2 விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டும் எடுத்து பரிதாபகரமாக வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. இறுதி ஓவரை பிரமாதமாக வீசிய ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி, நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
போட்டிக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்பிளே ,‘இலக்கை நெருங்கி வந்து தோல்வி அடைவது எங்களுக்கு கொஞ்சம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக துபாயில் இந்த மாதிரி நடக்கிறது. 19ஆவது ஓவரில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பது தான் எங்களது தெளிவான திட்டமாகும். அது தான் எங்களுடைய அணுகுமுறையாகவும் இருந்தது.