
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 10 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 11 ரன்களிலும், விராட் சிங் 2 ரன்களிலும், செனாபதி 13 ரன்களிலும், சௌரவ் திவாரி 16 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கிழக்கு மண்டல அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக் - குஷாக்ரா இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ரியான் பராக் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குஷாக்ரா 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.