இணையத்தில் டிரெண்ட் ஆகும் மிஸ் யூ தோனி ஹேஷ்டேக்!
ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலையில் உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியதே இதற்கு காரணம். இந்நிலையில், ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு வேகப்பந்து வீச்சு கைகொடுக்காததே அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. இந்த சங்கடமான சூழலில் தான் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இந்திய அணிக்காக தோனியின் பங்களிப்பை ரசிகர்கள் இப்போது மீண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Trending
இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை மிஸ் செய்திருப்பார் ஸ்ட்ரைக்கில் இருந்த ஷானகா. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அது கீப்பரான பந்த் வசம் தஞ்சமாகி இருக்கும். இருந்தும் பை ரன் எடுக்க இலங்கை பேட்ஸ்மேன்கள் ஓட்டம் எடுத்திருந்தனர். பந்த் குறிப்பார்த்து ஸ்டம்பைத் தாக்க முயற்சி செய்தார். அதற்காக தனது வலது கை கீப்பிங் கிளவுஸை அவர் முன்கூட்டியே கழட்டியும் வைத்திருந்தார். இருந்தும் பந்து ஸ்டம்பை தகர்க்க தவறியது.
அதோடு அது பவுலர் ஹர்ஷ்தீப் வசம் தஞ்சமாகி இருக்கும். அவரும் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டம்பை தகர்க்க முயன்று தவறினார். அந்த இடைப்பட்ட நேரத்தில் இலங்கை அணி 2 ரன்களை பூர்த்தி செய்து வெற்றி பெற்றது.
இது போல எதிரணியின் பல பை ரன் ஓட்ட முயற்சிகளை தோனி விக்கெட் கீப்பராக இருந்த போது அபாரமாக செயல்பட்டு தடுத்துள்ளார். அது ஆட்டத்தின் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது அந்த திறனை தான் இப்போது ரசிகர்கள் போற்றி பாடி வருகின்றனர். குறிப்பாக அவரை மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்றதை போலவே கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்படும். அப்போது இதே போலவே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பை ரன் ஓட முயன்றிருப்பார்கள். அதை சரியாக கணித்த தோனி ஸ்டம்புகளை தகர்த்து அணிக்கு 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கி இருப்பார். அதை தான் இப்போது ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அன்று தோனி செய்ததை போல இன்று இந்திய அணி வீரர்கள் செய்திருந்தால் ஆட்டத்தில் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும் எனவும் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now