
சொந்த மண்ணில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றொரு எளிதான வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. சேப்பாக் மைதானத்தின் தன்மையை நன்கு உணர்ந்த தோனி, யுக்திகளை வகுத்து எளிதாக வென்று வருகிறார். ரவீந்திர ஜடேஜா சுழல் தாக்குதலில் தலைமை தாங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுக்கு 134 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணிக்கு வலுவான தொடக்கத்தை டெவான் கான்வே மற்றும், ருதுராஜ் கெய்க்வாட் கொடுக்க ஆட்டம் பதற்றமின்றி மிகவும் எளிதாக முடிந்தது. டெவோன் கான்வேயின் ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி பேட்டிங்கில் களமிறங்கவில்லை என்றாலும், விக்கெட் கீப்பராக ஃபுல் ஃபார்மில் இருந்தார்.
ஒரு நல்ல கேட்ச், தூரத்தில் இருந்து கச்சிதமான ரன் அவுட், அதிவேக ஸ்டம்பிங் என களத்தில் சீறிப்பாய்ந்தார். ஆனாலும் பெஸ்ட் கேட்ச் ஆஃப் த மேட்ச் விருது அவருக்கு கொடுக்கப்படாததை குறித்து புகார் தெரிவித்தார். 13வது ஓவரின் இறுதிப் பந்தில் மகேஷ் தீக்ஷனா, ஹைதராபாத் அணிக் கேப்டன் எய்டன் மார்க்ரமுக்கு வீசிய பந்து கேட்ச்சில் முடிந்தது.