
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 263 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி, 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட்நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பதும் நிஷங்கா 53 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.