
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலும், இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து, இலங்கை அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் கருணரத்னே இப்போட்டியில் 7 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டவுள்ளார். மேலும் இந்த சாதனையை படைக்கும் நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார்.