
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ரூபின் ஹர்மன் 28 ரன்களையும் சேர்த்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் டோனோவன் ஃபெரீரா மற்றும் லுதோ சிபம்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 87 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நீடித்து வருகிறது.