
டெல்லியில் நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கர்நாடக அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. நடுவரிசை வீரர் அபினவ் மனோஹர் 46 ரன்களும் பிரவீண் டுபே 33 ரன்களும் எடுத்தார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் இலக்கைத் துரத்திய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கடைசி 4 ஓவர்களில் தமிழக அணி வெற்றி பெற 55 ரன்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஷாருக் கான் களமிறங்கியிருந்தார். அதனால் அணியைக் கரை சேர்க்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் அவரிடம் இருந்தது. தர்ஷன் வீசிய 17-வது ஓவரில் ஷாருக் கானும் சஞ்சய் யாதவும் 19 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் 18ஆவது ஓவரை வீசிய பிரதீக் ஜெயின் சஞ்சய் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.