
இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும் வெகு விரைவிலேயே தோனி போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வந்த பிறகு தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.
ஆனால் எப்போதெல்லாம் மற்ற வீரர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்ததோ, அப்போதெல்லாம் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக தினேஷ் கார்த்திக் விளையாடி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் அந்த தொடருக்கு பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
ஆனால் நிச்சயம் மீண்டு வந்து இந்திய அணிக்காக குறைந்தது இரண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற சபதம் எடுத்துகொண்ட தினேஷ் கார்த்திக் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அந்த பிரமாதமான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இருந்து அவரை ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு தற்போது மீண்டும் டி20 அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்.