
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
அதேசமயம் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இந்த சீசனுடன் தனது ஓய்வை அறிவித்தார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இதுதான் தன்னுடைய கடைசி ஐபிஎல் சீசனும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆர்சிபி அணியானது எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியதை அடுத்து அவர் இதனை அறிவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக் தனது 39ஆவது பிறந்தநாள் பரிசாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக், 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 17 அரைசதங்கள் என 3300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.