
தமிழகத்தின் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உலகத்தரம் வாய்ந்த வீரராக இந்தியாவுக்கு பரிசளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6ஆவது சீசன் வரும் ஜூன் 23 முதல் ஜூலை 31ஆஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது.
சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உட்பட தமிழகத்தின் டாப் 8 மாவட்டங்களை மையமாகக் கொண்ட 8 அணிகள் கோப்பைக்காக 32 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் 28 லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன்பின் ஐபிஎல் தொடரை போல குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளின் வாயிலாக ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாட போகும் 2 அணிகள் தீர்மானிக்கப்பட உள்ளன. இந்த வருடம் புகழ்பெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அல்லாமல் திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்த தொடர் நடைபெற உள்ளது. அதில் வரும் ஜூன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் மற்றும் நெல்லை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.