
ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நேற்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்க்ளைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 34 ரன்களையும், விராட் கோலி 33 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் ஒருகட்டத்தில் அந்த அணி அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரியான் பராக் 36 ரன்களையும், ரோவ்மன் பாவெல் 16 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.