பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் முடிந்ததும் வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய மகளிர் அணி பங்கேற்க உள்ளது.
இத்தொடரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது பகலிரவு டெஸ்ட் போட்டிகாக நடத்தப்படவுள்ளது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி முதன்முறையாக பகலிரவு டெஸ்டில் விளையாட உள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, "ஆடவருக்கான பகலிரவு டெஸ்ட் போட்டியை பார்த்திருக்கிறேன். அப்போது, இந்த அனுபவம் எங்களுக்கும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. முதன்முறையாக பகலிரவு டெஸ்டில் விளையாட இருப்பது வியப்பாக உள்ளது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம் வயதில் முதன்முறையாக பகலிரவு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிய போது இருந்த உற்சாகம், தற்போதும் உள்ளது. இப்போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாட இருப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இப்போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இது, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
ஒரே ஆண்டில் 2 டெஸ்டில் விளையாடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது எங்கள் கவனம் முழுவதும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மீது மட்டுமே உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் விளையாட இருப்பது சுவாரஸ்யம். இப்போட்டிக்கு பின் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராவோம்" என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now