
இலங்கை அணி சமீப காலத்தில் இந்திய அணியிடம் மிக மோசமான தோல்விகளை பெற்று வருகிறது. குறிப்பாக எந்த அணியிடமும் பெறாத அளவிற்கான படுதோல்விகளாக அவை அமைந்திருக்கின்றன. நேற்றைய போட்டிக்கும் முன்பாக ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்து 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
நேற்று உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சில் 357 ரன்கள் கொடுத்துவிட்டு, திரும்ப பேட்டிங் செய்ய வந்து 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தது. இதனால் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள். இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இங்கிலாந்தை வெல்வதும் பிறகு வந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்பதுமாக தான் இருக்கிறார்கள்.
இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் தரப்பிலிருந்து பேசிய நவீத் நவாஸ், “இது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு விஷயம்தான். ஆனால் நான் இதை இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சியாகப் பார்க்கவில்லை. எங்களிடம் 100 ஒருநாள் போட்டிகள் விளையாடிய சில வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மீதம் பெரும்பான்மையானவர்கள் இளம் கிரிக்கெட் வீரர்கள். நாங்கள் இருக்கும் நிலையில் இருந்து இது மறுக்கட்டு அமைப்பு செய்வதற்கான நேரம்.