
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்.
1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது.
2013ஆம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியில் சுமூக உறவு இல்லாத நிலையில், 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவே தவிர, இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை.