
நடப்பு உலகக் கோப்பையின் இரண்டு ஆட்டங்களும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் இப்படி ஒரு தொடக்கத்தை இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இந்திய அணிக்கு எதிராக 199 ரன்களில் ஆஸ்திரேலியா சுருண்டது, அவர்களை தாண்டி பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
இந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 312 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா, முன்னணி விக்கெட்டுகளை எல்லாம் நூறு ரன்களை எட்டுவதற்கு முன்பாகவே இழந்து, 177 ரன்களுக்கு மீண்டும் சுருண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த அணியைப் பார்ப்பதற்கு வழக்கமான ஆஸ்திரேலியா அணி போலவே இல்லை.
களத்தில் அவர்களிடமிருந்து பெரிய போட்டி வெளிப்படவில்லை. அவர்கள் எந்த முடிவு ஏற்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவே தெரிகிறார்கள். பழைய எந்த ஆஸ்திரேலியா அணியை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் களத்தில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். கடைசிப் பந்து வரை அவர்கள் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். திட்டங்களை மாற்றி கடுமையாக போரிடுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அப்படி எதையும் பார்க்க முடியவில்லை.