
டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டெல்லி பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்று நார்த் டெல்லி மற்றும் சௌத் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சௌத் டெல்லி அணியில் சர்தக் ரே 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஆயூஷ் பதோனி இணை அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்ஸர்களையும் மழையாக பொழிந்தனர். இவர்களில் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பந்துவீச்சாளர் தடுமாறினர். தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாடி வந்ததுடன், இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர்.
பின்னர் 8 பவுண்டரி, 19 சிக்ஸர்கள் என 165 ரன்கள் எடுத்த நிலையில் ஆயூஷ் பதோனியும், 10 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 120 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யாவும் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பிம் சௌத் டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 308 ரன்களைக் குவித்தது. நார்த் டெல்லி அணி தரப்பில் சித்தார்த் சோலங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.