
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் மேக்ஸ் ஹொல்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஹொல்டனும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் டேன் லாரன்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் கைஸ் அஹ்மத், குல்பதின் நைப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.