
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் அபிதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷாய் ஹோப் மற்றும் டேவிட் வார்னர் இணை சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாய் ஹோப் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்பதின் நைபும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிய டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குல்பதின் நைப் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரொவ்மன் பாவெலும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, இறுதியில் அபாரமாக விளையாடிய தசுன் ஷனகா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.