
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மண்டல அணியும், தெற்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி களமிறங்கிய மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய தெற்கு மண்டல அணி, 83.1 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. இதில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார்.