
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. அதன்படி இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய பாபா இந்திரஜித் அரைசதம் விளாசினார்.
பின்னர் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 111 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜிதும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் இந்தியா சி அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களுடனும்,மனவ் சுதர் 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மனவ் சுதர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.