
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முந்தினம் தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா டி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அரைசதம் கடந்ததுடன் 86 ரன்களைச் சேர்த்திருந்தார்.
இதன்மூலம் இந்தியா டி அணியானது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்களிலும், ஆர்யன் ஜூரெல், ராஜத் பட்டிதார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 72 ரன்களிலும், அபிஷேக் போரல் 34 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா சி அணியும் 168 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. பின்னர் 4 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில் அதர்வா டைடே, யாஷ் தூபே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.