
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணியை பந்துவீச அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு யசோதா லங்கா - லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யசோதா லங்கா ஒரு ரன்னிலும், லஹிரு உதாரா 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நுவநிது ஃபெர்னாடோ, அஹான் விக்கிரமசிங்க ஆகியோரும் சொற்ப ரன்களில் நடைடைக் கட்டினர்.
இதனால் இலங்கை அணி 15 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த பவன் ரத்னாயகே மற்றும் சஹான் ஆராச்சிகே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பவன் ரதனாயகே 20 ரன்களிலும், அடுத்து வந்த நிமேஷ் விமுக்தி 23 ரன்களிலும், ரமேஷ் மெண்டிஸ் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹான் ஆராச்சிகே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.