
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஐக்கிய அரபு அமீரக அணி பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணியில் ராகுல் சோப்ரா அரைசதமடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் ஐக்கிய அரபு அமீராக அணி 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரஷிக் தர் சலாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பிரப்சிம்ரன் சின் 8 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் சிரப்பாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.