
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் - அமீர் கலீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அமீர் கலீம் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரண் சொனாவலே ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜதிந்தர் சிங்குடன் இணைந்த வசிம் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.
அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜதிந்தர் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பாவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் ஓமன் அணி 80 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நதீம் மற்றும் ஹமத் மிர்ஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடியதுடன் 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.