
இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 129 ஓவா்களில் 423/8 ரன்களை எடுத்திருந்தது. ஓவா்டன் 24 ரன்களுடனும் ராபின்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். இதில் அதிகபட்சமாக கேப்டன் ரூட், 165 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார்.