
இந்தியா - இங்கிலாந்து இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.
99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அபார சதம்(127), புஜாரா(61), ராகுல்(46), விராட் கோலி(44) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் பின்வரிசையில் ஷர்துல் தாகூர்(60) மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதத்தால்(50) 2வது இன்னிங்ஸில் 466 ரன்களை குவித்தது. உமேஷ் யாதவ்(25) மற்றும் பும்ரா(24) ஆகிய இருவரும் பங்களிப்பு செய்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது. அதன்பின் 368 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. 4ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் 2வது இன்னிங்ஸில் இலக்கை விரட்ட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகிய இருவரும் 4ம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டை இழக்கவில்லை. 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி 77 ரன்கள் அடித்திருந்தது.