
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதில் 3ஆம் நாளான இன்று இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடி வருகிறது. அபாரமாக ஆடிய ஜோ ரூட் தனது 22ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அவர் இங்கிலாந்து அணி கேப்டனாக 11 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்களில் ஜோரூட் 3ஆவது இடத்தை பிடித்தார். 33 சதங்களுடன் குக் முதல் இடத்திலும் 23 சதங்களுடன் கெவின் பிட்டர்சன் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தியுள்ளார். இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் 9ஆயிரம் டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர் எனும சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.