
இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்ததால் மீண்டும் அவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இணைத்திருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இரண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
அதன்பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்பிறகு செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சி போட்டியிலும் விளையாட இருக்கிறது.