ENG vs NZ, 2nd Test: ரூட், போப் அதிரடி சதம்; முன்னிலை நோக்கி இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரின் அபார சதத்தால் பெரிய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிவருகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி டேரைல் மிட்செல் மற்றும் டாம் பிளண்டெலின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.
Trending
டெரில் மிட்செல் 190 ரன்களையும், டாம் பிளண்டெல் 106 ரன்களையும் குவித்ததன் விளைவாக முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 553 ரன்களை குவித்தது. 2ஆம் நாள் ஆட்டத்தின் 3ஆவது செசனில் தான் முதல் இன்னிங்ஸை முடித்தது நியூசிலாந்து அணி.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிரௌலி 2ஆவது ஓவரில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால் 147 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடிவருகின்றனர். ஒல்லி போப் சதமடிக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட்டும் சதமடித்தார்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஒல்லி போப் 145 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் தனது பங்கிற்கு 46 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 150 ரன்களை கடந்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 163 ரன்களும், பென் ஃபோக்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now