ENG vs SA, 2nd Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இங்கிலாந்து தடுமாற்றம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களைச் சேர்த்துள்ள்
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து , 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து ஒரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Trending
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து மண்ணில் தனது 100ஆவது டெஸ்ட்டில் விளையாடி வரும் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமாக பந்துவீசினார். தொடக்க வீரர் எர்வீயை 3 ரன்னில் ஆண்டர்சன் வீழ்த்த, மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் 12 மற்றும் 3ஆம் வரிசை வீரர் கீகன் பீட்டர்சன் 21 ஆகிய இருவரையும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.
அடுத்தடுத்து மற்ற வீரர்களும் வரிசையாக நடையை கட்ட, 108 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது தென் ஆப்பிரிக்க அணி. ஆனால் 9ஆவது விக்கெட்டுக்கு டெயிலெண்டரான ககிசோ ரபாடா சிறப்பாக பேட்டிங் செய்து 36 ரன்கள் அடித்தார். ரபாடா 36 ரன்களுக்கும், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 10 ரன்களுக்கும் வெளியேற, முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி சார்பில் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 23 ரன்களோடு நடையைக் கட்டினார்.
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோ ரூட் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரபாடாவிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, இங்கிடி, நோர்ட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now