ENG vs SA, 2nd Test: தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிரங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கார் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சாரெல் எர்வீ 3 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடிய பீட்டர்சன் 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
Trending
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த வீரர்கள் பெவிலியன் திரும்பினர். நட்சத்திர வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் கூட்டணி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 151 ரன்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது அலெக்ஸ் லீஸ் 4 ரன்களிலும், ஜோ ரூட் 9 ரன்களிலும், ஜாக் கிரௌலி 38 ரன்களிலும் ஆட்டமிழக்க, போப் 23 ரன்களில் போல்ட் ஆனார். இதனையடுத்து இங்கிலாந்து அணி தடுமாற, களத்துக்கு வந்த பென் ஸ்டோக்ஸ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து டெஸ்ட் கேப்டனாக தனது முதல் சதத்தை பென் ஸ்டோக்ஸ் பூர்த்தி செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பொறுப்புடன் விளையாடி முதல் சதத்தை விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்தது.
அதன்பின் 415 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் ஃபோக்ஸ் 113 ரன்களை எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்க அணி ஆண்ட்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டீன் எல்கர் - சரெல் எர்வீ நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, சரெல் எர்வீ 25 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர். அதனைத் தொடர்ந்து வந்த ஐடன் மார்க்ரமும் 6 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கீகன் பீட்டர்சென் - ரஸ்ஸி வெண்டர் டுசென் இணை ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். பின் 42 ரன்களில் பீட்டசென்னும், 41 ரன்களில் வெண்டர் டூசெனும் ஆட்டமிழந்தனர். ஆனால் அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 179 ரன்கலோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளையும், ஜிம்மி ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன்செய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now