
:இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் ஜுவெல் ஆண்ட்ரூ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜுவெல் ஆண்ட்ரூ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பிராண்டனுடன் ஜோடி சேர்ந்த கேசி கார்டி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 10 பவுண்டரிகளுடன் 59 ரன்களைச் சேர்த்திருந்த பிராண்டன் கிங் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து கேசி கார்டியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.