
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்றைய தினம் சௌதாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜேமி ஸ்மித் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 120 ரன்கையும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட்டும் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹாரி புரூக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்க்க, இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 248 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ரூதஃபோர்ட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.