
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைக் குவித்தது. பின்னர் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 82 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒருபக்கம் நிதானம் காட்டினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.