
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஜூலை 26) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். அதன்பின் மைக்கேல் லூயிஸ் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸி 12 ரன்களிலும், அலிக் அதானாஸ் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடிய வந்த கிரேக் பிராத்வைட் 61 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் - ஜோஷுவா டா சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஜோஷுவா டா சில்வா 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேசன் ஹோல்டரும் ஆட்டமிழந்தார்.