
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் நீடித்துள்ளார்.
மேற்கொண்டு பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 9ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இங்கிலாந்து டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர்பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் 13 இடங்கள் முன்னேறியதுடன் 10ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.