இந்தியா, இங்கிலாந்து அணியை அரையிறுதியில் எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பாது - மைக்கேல் வாகன்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இந்த இரண்டு அணிகளையும் அரையிறுதியில் எந்த அணியும் எதிர்கொள்ள விரும்பவே விரும்பாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல அதிரடியான கருத்துக்களை கூறி வரக்கூடியவராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இருக்கிறார். இவருக்கும் இந்திய வீரரான வாசிம் ஜாஃபருக்கும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வரும். இந்திய கிரிக்கெட் குறித்து மைக்கேல் வாகனின் கருத்துகள் எப்பொழுதும் குத்தலாகவே இருக்கும்.
இந்த நிலையில் அவரது போக்கில் தற்போது கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, அவரது பார்வை அவர்களது நீண்ட கால எதிரியான ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு வரக்கூடிய நான்கு அணிகளாக அவர் கணித்த அணிகளில், அதிர்ச்சி அடையும் விதமாக ஆஸ்திரேலியா இல்லை. மேலும் இந்தியா இங்கிலாந்து இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும், இறுதியாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தார்.
Trending
இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன், “இந்தியா மற்றும் இங்கிலாந்து இந்த இரண்டு அணிகளையும் அரையிறுதியில் எந்த அணியும் எதிர்கொள்ள விரும்பவே விரும்பாது. உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனைத்தும் இந்தியாவிடம் இருக்கிறது. ஆனால் இந்தியாவிடம் இல்லாத ஒரே விஷயம் இடது கை பேட்ஸ்மேன்கள்.
அவர்களது பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இடதுகை வீரராக இருக்கிறார். அவரும் ஏழாவது வீரராக வருகிறார். ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அடி. அவர் அதிரடியாக சுதந்திரமாக விளையாடக் கூடியவர். ஆனால் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் உலகத்தரம் ஆனவர்கள். ஸ்பின்னர்கள் கூட அப்படித்தான். இந்தியா எப்பொழுதும் அழுத்தத்தை சமாளிக்க முடியுமா? இந்த கேள்வி முக்கியமானது.
கடந்த மூன்று முறையும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை நடத்திய நாடுகளே வெற்றி பெற்று இருக்கின்றன. எனவே இந்தியா இந்த முறை தொடரை வெல்ல வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இவர்கள் யாரும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அரை இறுதியில் இந்திய அணியை எந்த அணி வீழ்த்தினாலும் அவர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now