
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 26 பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஜேமி ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலமாக 376 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும், அலிக் அதானாஸ் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அலிக் அதானாஸ் 12 ரன்களுடன் நடையைக் கட்டினாலும் மறுபக்கம் மைக்கேல் லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.