
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு லாரா வோல்வார்ட் - லாரா குட்ஆல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குட்ஆல் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னேக் போஷ்க்கும் 19 ரன்களுடனும் நடையைக் கட்டினார். இதற்கு மத்தியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா வோல்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களைச் சேர்த்த நிலையில் வோல்வார்ட்டும் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய மரிஸான் கேப் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாடியா நிலையில், மறுபக்கம் களமிறங்கிய நதின் டி கிளார்க் 14 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய அன்னேரி டெர்க்சன் 13 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மரிஸான் கேப்பும் 38 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அலிஸ் கேப்ஸி, சார்லீ டீன், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.