
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டங்க்லி - டேனியல் வையட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டங்க்லி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி, கேப்டன் ஹீதர் நைட், எமி ஜோன்ஸ், கிப்சன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டேனியல் வையட் அரைசதம் கடந்ததுடன், 76 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.