
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 76 ரன்களையும், அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 70 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய கஸ் அட்கின்ஸன் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 70 ரன்களையும் சேர்த்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தனது அறிமுக ஆட்டத்திலேயே கஸ் அட்கின்சன் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.