NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 84 ரன்களை குவித்தார். மிடில் ஆர்டர் அபாரமாக பேட்டிங் விளையாடிய ஹாரி ப்ரூக் 89 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 42 ரன்களும், பென் ஃபோக்ஸ் 38 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 325 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில் டாம் பிளண்டெல் மற்றும் தொடக்க வீரர் டெவான் கான்வே ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார்கள். அபாரமாக ஆடிய டாம் பிளண்டெல் சதமடித்தார். பிளண்டெல் 138 ரன்களையும், டெவான் கான்வே 77 ரன்களையும் குவிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்கள் அடித்தது.
Trending
பின்னர் 19 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியில் அனைத்து வீரர்களுமே பங்களிப்பு செய்தனர். ஜோ ரூட் (57), ஹாரி ப்ரூக்(54) மற்றும் பென் ஃபோக்ஸ்(51) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அவர்களுடன் ஒல்லி போப்(49), ராபின்சன்(39) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, 2ஆவது இன்னிங்ஸில் 374 ரன்களை குவித்தது இங்கிலாந்து.
மொத்தமாக 393 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற, 394 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் இலக்கை விரட்டிவரும் நியூசிலாந்து அணி்யின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். அதிலும் டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ், டாம் பிளெண்டல் என வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி வெறும் 28 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் வேகத்தில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் சரிந்தது. இதனால் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் அடித்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தொடர்ந்தனர்.
இதில் டேரில் மிட்செல் அரைசதம் கடந்தார். பின் 57 ரன்னில் மிட்செல்லும், 25 ரன்னில் மைக்கேல் பிரேஸ்வெலும் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து தரப்பில் ஜேஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now