
England vs New Zealand Nottingham Test 2022: உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்துள்ள நியூசிலாந்தை இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 2ஆவது போட்டி ஜூன் 10ஆஆம் தேதியன்று டிரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கியது.
அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் அற்புதமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் டாம் லாதம் 26, வில் எங் 47, டேவோன் கான்வே 46, நிக்கோலஸ் 30 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் குவிக்க மிடில் ஆர்டரில் அபாரமாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் சதமடித்து 190 ரன்கள் குவித்தார்.
அவருடன் சிறப்பாக பேட்டிங் செய்த டாம் ப்ளண்டல் தனது பங்கிற்கு சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் தனது சொந்த மண்ணில் அபாரமாக பேட்டிங் செய்து 539 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக 3-வது இடத்தில் களமிறங்கிய ஓலி போப் சதமடித்து 145 ரன்கள் எடுக்க அவரைவிட முரட்டுத்தனமான பார்மில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் சதமடித்து 176 ரன்கள் விளாசினார். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.