
கிரிக்கெட் உலகில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தான். இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் போட்டியிட்டு வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னும் ஒரு வெற்றியை பெற்றால் கூட இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்குள் நுழைந்துவிடும். இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க இங்கிலாந்து அணி தனியாக கலக்கி வருகிறது. இங்கிலாந்து அணியில் புதிதாக கூட்டணி அமைத்துள்ள பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேஸ்பால் என்ற புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடுவது தான். முதல் ஓவரில் இருந்தே டி20 கிரிக்கெட் போல அதிரடியாக ரன் குவிக்கின்றனர்.
இங்கிலாந்தின் அதிரடியை சமாளிக்க முடியாத எதிரணிகள் ரன்களை வாரி வழங்கிவிடுகின்றனர். ஆனால் எதிரணி வழக்கமான டெஸ்ட் அணுகுமுறையை காட்டும் போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிடுகின்றனர். இதே போன்ற செயல்பாட்டை இந்திய அணியிலும் அவ்வபோது காட்டுவோம் என ரோஹித் சர்மா முன்பு கூறியிருந்தார்.