
IRE vs ENG, 1st T20I: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 89 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று டப்ளினில் உள்ள தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ராஸ் அதிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் ராஸ் அதிர் 26 ரன்னிலும், பால் ஸ்டிர்லிங் 34 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஹாரி டெக்டர் - லோர்கன் டக்கர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்த நிலையில் லோர்கன் டக்கர் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.