
EN-W vs IN-W 3rd T20I: சோபியா டங்க்லி மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு சோபிய டங்க்லி மற்றும் டேனியல் வையட் ஹாட்ஜ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் டங்க்லி விக்கெட்டை இழக்க, 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 66 ரன்களை எடுத்திருந்த டேனியல் வையட்டும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் ரன்களைச் சேர்க்க தவறினர்.